அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கல்வி, நல்லிணக்கம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார்.

கல்விச் சீர்திருத்தத்தைப் பாராட்டிய பேராயர் Gallagher, “கல்வியே அமைதி, நம்பிக்கை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய பெயர்” என்று குறிப்பிட்டதோடு, திருச்சீமையின் உலகளாவிய முயற்சியான உலகக் கல்விப் பொன்விழா குறித்தும் எடுத்துரைத்தார்.

போருக்குப் பின்னர் உருவாகி இருக்கும் நல்லிணக்கத்தைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அனைவரையும் உள்வாங்கிய, பன்மைத்துவ அணுகுமுறையைப் பற்றி எடுத்துரைத்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் புதிய சிந்தனை ஆகியன தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையைப் பாராட்டிய பேராயர் Gallagher, சர்வதேச நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு நீதி அமைப்புகள், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் முடிவில், திருச்சீமையின் திருத்தந்தை Leo XIV அவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வது குறித்துப் பேராயர் Gallagher முன்மொழிந்தார். இந்தப் பரிந்துரையை வரவேற்றப் பிரதமர், உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததோடு, திருச்சீமைக்கு விஜயம் செய்யுமாறு பேராயர் Gallagher விடுத்த அழைப்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

வத்திக்கான் தூதுக்குழுவில் கொழும்பில் அமைந்துள்ள திருச்சீமைத் தூதரகத்தின் பொறுப்பாளர் கௌரவ அருட்தந்தை Monsignor Roberto Lucchini, திருச்சீமை அரச செயலகத்தின் இரண்டாம் செயலாளர் Rev. Monsignor Tomislav Zubac ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர்.

இலங்கையின் சார்பாகப் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகீஷ்வர குணரத்ன மற்றும் பிரதிப் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி அனோத்யா சிரஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

வீடியோ

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு 100 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் – முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

editor