எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் விசேடமாக 2,500 மேலதிக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு பொலிஸ் மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட செய்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
நகரங்களின் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்த அனைத்து பணிகளுக்காகவும் 2,500 மேலதிக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்கள் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தும் போது அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
அந்த வாகனத்தில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம்.
உங்களுக்கு யாராவது ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.
இந்த பண்டிகைக் காலத்தில் சிவில் உடையில் பல பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வாளர்களும் உங்கள் உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளும் உங்களைப் பாதுகாக்கத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
