தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது.
நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது.
நாட்டு மக்களினது வாழும் உரிமையைப் பாதுகாப்பது நாட்டின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், இன்றளவில், முறையான பொது மக்கள் பாதுகாப்பை வழங்க முடியாததொரு அரசாங்கமே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) தெரிவித்தார்.
நாட்டில் காட்டுச் சட்டமே தற்போது நடைமுறையில் காணப்படுகின்றது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 67 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஊடாக 37 உயிர்கள் பலியாகியுள்ளன.
தேசிய பாதுகாப்பு குறித்து டியுசன் வகுப்புகளை எடுப்போம் என ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் மக்கள் மத்தியில் வீராப்புடன் பிரஸ்தாபித்தனர்.
ஆனால் இன்று தேசிய பாதுகாப்பும், பொது மக்கள் பாதுகாப்பும் முற்றிலுமாக இல்லாது போயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்நேரத்தில், எந்தக் கட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு உயிர்கள் பழிபோகும் என்ற பிரச்சினை எழுந்து காணப்படுகின்றன.
சட்டம் ஒழுங்கு மீதான தற்போதைய அடி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஆனபடியால் இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பித்து விட முடியாது.
ஒட்டுமொத்த பொதுமக்களும் இந்த தேசிய பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து நிற்பதால் அரசாங்கம் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த கொலை கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்காத விடத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
இது அரசாங்கத்தின் தோல்வியை காட்டி நிற்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
வீடியோ