அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட மாட்டாது – கைரேகை ஸ்கேனர் நிச்சயம் பொருத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தபால் துறையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கே செலவாவதாகவும், அந்த வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு தபால் துறை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்படமாட்டாது என்பதை சபையில் நேற்று (21) சுட்டிக்காட்டிய அமைச்சர்,

”மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை ஸ்கேனர் (பிங்கர் பிரின்ட்) இயந்திரம் நிச்சயம் பொருத்தப்படும் என்றும் அரசியல் நோக்கத்துடனான போராட்டத்துக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்பி எம்.எஸ்.உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

”மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தின் ஊழியர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் எவரும் இவ்விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பவில்லை.
ஐக்கிய தபால் சேவை சங்கத்தினர் தான் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள் எனினும் தனியார் தபால் துறையினர் இலாபமடைவார்கள் என்பதை நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.

தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1000 நியமனங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன.

அதேபோல் 1000 நியமனங்களுக்கு விண்ணப்பம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகன கொள்வனவுக்கு ரூ. 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தபால் நிலையங்களை புனரமைக்க ரூ. 600 மில்லியன் நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் தான் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றார்கள்.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுதந்திர தொழிற்சங்கம், ஐக்கிய தபால் தொழிற்சங்கம், ஐக்கிய தபால் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அரச நிர்வாக கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு கோரியும், கைரேகை ஸ்கேனர் (பிங்கர்பிரின்ட்) இயந்திரத்தை பொறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றார்கள்.

தபால்சேவையில் 2 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய ரூ. 168 மேலதிக நேர கொடுப்பனவு ரூ. 234 ஆகவும், 2 ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய ரூ. 254 மேலதிக நேர கொடுப்பனவு ரூ. 370 ஆகவும், 1 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய ரூ. 222 மேலதிக நேர கொடுப்பனவு ரூ. 324 ஆகவும், 1ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு ரூ. 439 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தபால் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த 17 கோரிக்கைகளை நிறைவேற்ற இணக்கம் தெரிவித்துள்ளோம்.

மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!