கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான, இலங்கைக்கு உரித்தான இடமென வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் நடிகர் விஜய் தமது கட்சி மாநாட்டில் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி கச்சத்தீவின் உரிமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக இந்திய மத்திய அரசோ அல்லது அந்நாட்டு இராஜதந்திர ரீதியாகவோ எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
தென்னிந்தியா தற்போது தேர்தல்களுக்கு தயாராகி வருவதாகவும், வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தெரிவித்த அமைச்சர், இந்தப் பிரச்சினை ஏற்கனவே பல முறை தேர்தல் மேடைகளில் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் இடம்பெற்ற அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மதுரையில் இடம்பெற்ற இம்மாநாட்டில், தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்வதாக குறிப்பிட்ட அவர், கச்சத்தீவை மீட்டுக் கொடுக்குமாறு தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருவதாகவும் விஜய் தமது உரையில் சுட்டிக்காட்டியதோ, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வீடியோ