வில்பத்து பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு வனப்பகுதி வலயத்தில் 168 ஹெக்டேர் நிலத்தை இறால் பண்ணையை பராமரிப்பதற்காக விடுவிப்பதற்காக முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் வனவிலங்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரை ராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, மீளாய்வு செய்த பிறகு வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, குறித்த வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இருப்பினும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதாக அறிவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
பிரதிவாதிகள் அதற்கேற்ப செயல்படத் தயாராக உள்ளனர் என்ற நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இணக்கம் வௌியிட்டார்.
பின்னர், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி திரும்பப் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.