வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதியை அமைக்க பரிந்துரைக்கப்பட்ட பணிகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (07) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
சுற்றாடல் சார்ந்த அமைப்பு ஒன்று வீதி அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக நீதிபதிகள் ஜனக் டி சில்வா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா இந்த அறிக்கையை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
வீதி அமைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் நீதி மன்றில் வழக்கை சமரசமாக தீர்க்க ஒப்புக்கொண்டனர்.
எனினும், தற்போது வில்பத்து தேசிய பூங்கா ஊடாக செல்லும் வீதியை மிருகங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பராமரிக்க முடியும் என உயர் நீதிமன்ற அமர்வு முன் கூறப்பட்டது.
அதன்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமரசமாக தீர்த்து வைத்து வழக்கு விசாரணையை முடிக்க தீர்மானம் செய்தது.
வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதி அமைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அத்தகைய அபிவிருத்திகள் பூங்காவின் சுற்றாடல் அமைப்புக்கும், மிருகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என மனுதாரர் வாதிட்டார்.
எனவே, பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.