வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை விபா புயல் நேற்று (22) தாக்கியுள்ளது.
இதன் விளைவாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு வியட்நாமில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு துறைமுக நகரமான ஹை போங் மற்றும் குவாங் நின் மாகாணத்தில் உள்ள விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இப்புயலுடன் கடும் மழையும் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் உட்பட 10 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான அரச அலுவலகங்களுக்கும், பாட்சாலைகளுக்கும் நேற்று விடுமுறை வழங்கப்பட்டன.
விபா புயலுக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் தண்ணீரில் மூழ்கிய கிராமங்களில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
நேற்று (22) காலை 10 மணியளவில் 64 -102 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றுடன் விபா புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 138 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்புயல் ஒரே இரவில் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் ஹனோயின் கிழக்கே உள்ள ஹங் யென் மாகாணத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக தலைநகர் ஹனோயின் வீதிகள் வெறிச்சோடியது.
இப்புயல் காரணமாக சுமார் 150,000 ஹெக்டேயர் (370,000 ஏக்கர்) மீன் வளர்ப்பு பண்ணைகள், 20,000-க்கும் மேற்பட்ட மிதக்கும் மீன், கூண்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மாகாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-அல் ஜசீரா