மும்பை சென்ற விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் நடுவானில் கரப்பான் பூச்சிகளால் களேபரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே கரப்பான் பூச்சிகள் இருந்ததால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் சில கரப்பான் பூச்சிகள் இருந்ததால், 2 பயணிகள் சிரமத்திற்கு ஆளான நிலையில், விமான ஊழியர்கள் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அமர வைத்தனர்.
அதன் பிறகு, கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக, விமானம் நிறுத்தப்பட்டபோது, விமானத்தின் உள்ளே சுத்தம் செய்யப்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில் விமானத்தில் வழக்கமான தூய்மைப் பணிகள் மேற்கொண்டு வந்தாலும், விமானம் தரையில் இருக்கும் போது சில நேரங்களில் பூச்சிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளதாகக் குறித்த விமான சேவை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.