மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது.
நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர்.
இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர்.
