விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை மட்டுமே பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அசோக ரன்வல செலுத்திய வாகனத்தின் பிரேக் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக் அமைப்பில் கோளாறு இருப்பதாகவும் வாகனப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், வைத்திய அறிக்கை கிடைத்த பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பாராளுமன்ற உறுப்பினரும் மற்றைய காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவரும் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது செய்யப்பட்ட நிலையில், நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பிலான அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை குறித்து ‘அத தெரண’ செய்திச் சேவை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரிடம் வினவிய போதிலும், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இது குறித்து வினவியபோது, அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தற்போது அசோக ரன்வலவின் இரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
