வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா(Azusa Kubota)தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமாநாயக்கவை சந்தித்தபோது அசுசா குபோடா இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள அரச சேவைகளை வழங்குவதற்காக உள் விவகார அலகுகளை (Internal Affairs Unit – IAU) நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கள் மேலும் மேம்படுத்துவது மற்றும் பணியாளர் பயிற்சிக்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இந்த அலகுகளை நிறுவுவது ஊழலைத் தடுக்கவும், அரசு நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், நெறிமுறை நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட அமுலாக்கத்தில் உதவவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரச அதிகாரிகளின் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. அந்த திட்டங்களுக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அசுசா குபோடா ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சர்வதேச நிபுணரும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) இஸ்தான்புல் ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின் தலைவருமான டிராகோ கோஸ் (Drago Kos)மற்றும் ஊழல் எதிர்ப்பு நிபுணர் தம்மிக தசநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு