இந்திய வம்சாவளியைச் சார்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த, டிசம்பர் 27, 2025 முதல் இவரது ஓய்வு அமலுக்கு வந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் தனது வாழ்க்கையில் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று, மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார்.
இதன்மூலம், விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த நபர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
மேலும், 9 முறை விண்வெளியில் நடந்து, மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். இதையடுத்து, அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளார்.
கடைசியாக 2024இல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்ற அவர், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டதை விட அதிக காலம் தங்கி, மார்ச் 2025-இல் பூமிக்குத் திரும்பினார்.
தற்போது, 60 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க மையத்தில் (American Center) நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, அவர் தனது விண்வெளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்குத் தனது பங்களிப்பு அடித்தளமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
மேலும், “விண்வெளிதான் எனக்குப் பிடித்தமான இடம். நாசாவில் பணியாற்றிய இந்த 27 ஆண்டுகள் மறக்க முடியாதவை” எனவும் பேசினார்.
விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டுகால விண்வெளிப் பயணத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், விண்வெளித் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் என்றும் ஒரு பெரும் முன்னுதாரணமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
