தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட தவெக, எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணவுள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருந்த 184 சின்னங்களில் இருந்து, தவெக சார்பில் ஆட்டோ, விசில், கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட 10 சின்னங்கள் முன்மொழியப்பட்டன,.
விஜய் தனது ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்ததை அடிப்படையாக வைத்து, ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னத்தையே கட்சி முன்னுரிமை அடிப்படையில் கோரியிருந்தது.
இதன் மூலம் சின்னத்தை மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என விஜய் வியூகம் வகுத்திருந்தார்.
எவ்வாறாயினும், தேர்தல் ஆணையம் தவெக-விற்கு ‘விசில்’ சின்னத்தை அனைத்து தொகுதிகளுக்குமான பொதுச் சின்னமாக அறிவித்துள்ளது
இதேவேளை, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அண்மைக்காலமாக சில அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ‘ஜனநாயகன்’ படத்திற்கான சென்சார் பிரச்சினைகள் மற்றும் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைகள் கட்சியின் பணிகளுக்கு இடையூறாக அமைந்திருந்தன.
இவ்வாறான சூழலில், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி மாமல்லபுரத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விஜய்யின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
