குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை அவரை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை (08) கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது “ஹரக் கட்டா” தனிப்பட்ட பாதுகாப்புக்காக Zoom காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார, பாதுகாப்பு செயலாளரின் உத்தரவுக்கு அமைய வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை “ஹரக் கட்டா”வை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் “ஹரக் கட்டா” சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “ஹரக் கட்டா” இரண்டு வருட காலமாக பொலிஸ் தடுப்பு காவலில் இருந்ததாகவும் அவரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க இருக்கும் போது மீண்டும் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க தீர்மானித்துள்ளமை தவறாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “ஹரக் கட்டா”வை தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்க உள்ளதாகவும் “ஹரக் கட்டா” சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.