வவுனியா நகர சபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வவுனியா நகர சபை உறுப்பினர்களான கந்தையா விஜயகுமார் மற்றும் சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மனு மீதான விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மனுவை மீண்டும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், வவுனியா நகர சபை முதல்வர் 11 வாக்குகளைப் பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டதாகவும், அவருடன் போட்டியிட்ட மற்ற உறுப்பினர் 10 வாக்குகளைப் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை முதல்வர் பதவிக்கு தெரிவானவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 11 எனவும், அவருடன் போட்டியிட்ட மற்ற உறுப்பினர் 10 வாக்குகளைப் பெற்றதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர், நகர சபையின் அதிகார எல்லைக்கு வெளியே வசிப்பவர் என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதல்வராகவும், துணை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அப் பதவிகளை வகிப்பதற்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, அந்தப் பதவிகளை வகிப்பதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் அப்பதவிகளில் செயற்படுவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்களது பதவிகளை செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று முன்னிலையாகியிருந்தது.