இன்று (15) வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தேவையற்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) அண்மையில் வடக்கிலும், கிழக்கிலும் இன்று ஹர்த்தால் நடைபெறும் என அறிவித்திருந்தது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஹர்த்தாலுக்கு எந்த காரணமும் இல்லை என்றார்.
“அவர்கள் ஹர்த்தால் நடத்துவார்கள் என்கிறார்கள், ஆனால் அதற்கு எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹர்த்தால் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஹர்த்தால் நடத்துவது ஒரு பயனற்ற செயல்.” என்று அவர் கூறினார்.
இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நடப்பதாகவும், ஆனால் அங்குள்ள மக்கள் ஹர்த்தால் நடத்துவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த சம்பவங்களை இனம் அல்லது மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. ஒரு குற்றம் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் எந்த பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
கடந்த சில மாதங்களாக இதை நாங்கள் நடைமுறையில் நிரூபித்து வருகிறோம்.” என்றார் அமைச்சர்.
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று தமிழரசு கட்சியினால் நடத்தப்பட்ட இந்த ஹர்த்தால், 32 வயதான ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து, ‘இராணுவத்தின் கொடூரமான செயல்’ என்று அவர்கள் விவரித்ததற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது.
அவரது உடல் இராணுவ முகாம் அமைந்துள்ள முத்தையன்கட்டு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், தமிழரசு கட்சியின் செயலாளரும், சனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இந்த மரணம் குறித்து அவசரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள “அதிகப்படியான இராணுவ பிரசன்னத்தை” நீக்குமாறும் கோரியிருந்தார்.