மறைந்த முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் புதிதாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மாமாவால் ஒழுங்கமைக்கபட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 2012ஆம் ஆண்டு, மே மாதம் தாஜுதீன் ஒரு மோசமான விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நான் சம்பவ இடத்துக்கு சென்ற போது, அவர் காரின் சாரதிக்கு அருகில் இருக்கும் இருக்கையில் தான் இருந்தார்.
காரும் மோசமாக தீக்கிரையான நிலையில் இருந்தது. இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காரணம் இவ்வாறு எப்படி ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருக்க கூடும் என தோன்றியது.
மேலும், தாஜுதீனின் மரணம் குறித்த அறிக்கையில், அவர் அதிவேகமாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் இறந்ததாகவும் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, தாஜுதீனின் மரணம் பொது மேடைகளில் ஒரு முக்கிய தலைப்பாக இருந்தது. உடலை தோண்டி எடுத்து புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியபோது, குடும்பத்தினர் சம்மதித்தனர்.
அந்த விசாரணை முந்தைய அறிக்கையை மறுத்தது, அதற்கு பதிலாக தாஜுதீன் சித்திரவதை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.
குடும்பத்திற்கு இதுவரை எந்த அரசாங்கத்திடமிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்று கூறிய தாஜுதீனின் மாமா, புதிய அரசாங்கம் இந்த வழக்கை எடுத்து மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இது ஏன் செய்யப்பட்டது? அவர் ஒரு தற்காப்புவாதி என்பதால்தானா? நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதுவரை எந்த அரசாங்கமும் எங்களுக்கு ஒரு தீர்வை வழங்கவில்லை.
13 ஆண்டுகளுக்குப் பிறகும், தற்போதைய அரசாங்கம் இந்த விஷயத்தை கையில் எடுக்கும் என்றும், பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இந்த அரசாங்கமும் இதைத் தீர்க்கத் தவறினால், எதிர்காலத்தில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.