மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில், இன்று (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், முத்து முஹம்மட், காதர் மஸ்தான், ரவிகரன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்,
மன்னர் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், அனுமதியின்றி முன்னெடுக்கப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளினாலோ, மாவட்ட அபிவிருத்திக் குழுவினாலோ எந்தவொரு அனுமதியும் அத்திட்டத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் சபையில் சுட்டிக்காட்டினார்.
ஆனால், முறையான அனுமதியுடன்தான் மேற்படித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்ற போதும், அது போலியான அனுமதி எனவும் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் ரிஷாட் எம்.பி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சபையில் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டம், மன்னார் தீவில் அமைக்கப்படக் கூடாது எனவும், மக்கள் நலனை கருத்திற்கொண்டு, அத்திட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் ரிஷாட் எம்.பி சபையில் கோரிக்கை விடுத்தார்.
அதன் பிற்பாடு, அந்தத் திட்டம் உடனடியாக இடைநிறுத்தி வைக்கப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழு அதற்குரிய கடிதங்களை உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
மேலும், முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்கள் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ரிஷாட் எம்.பி சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஏலவே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பட்சத்தில், இங்குள்ள ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறும் ரிஷாட் எம்.பியினால் சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், குறிப்பாக, வீதிப் புனரமைப்பு உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தின் இன்னோரன்ன அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ரிஷாட் எம்.பியினால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், வீதி புனரமைப்பு மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படவுள்ள நிதிகளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு