ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தரப்பினரினதும் செயற்குழுக்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதற்கு கட்சியின் செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இரண்டு குழுக்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கருத்து வௌியிடுகையில்,
நாட்டின் தற்போதைய நிலைமை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டடது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டார்.
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு இடையில் ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்குவது குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது வெற்றியளிக்கும் என நம்புகிறோம்.
இரு கட்சிகளினதும் தனித்துவத்தைப் பேணி, ஒரே தளத்திற்கு வருவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இரண்டு தரப்பு செயற்குழுக்களும் இது குறித்து கலந்துரையாட வேண்டும் என்பதுடன், ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.
