யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று (20) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது.
இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது.
உடனடியாக குழந்தை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
-கஜிந்தன்
