யாழ்குடா நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கறுப்பு ஜீலை நிகழ்வானது வருடந்தோறும் கட்டாயமாக நினைவுகூரப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். எமது இளைஞர்களுக்கு இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றமையினை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதனூடாக இளைஞர்கள் எமது இனத்திற்கு நடைபெற்ற கொடூரமான படுகொலைகளை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
இருப்பினும் 2009ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் துரதிஸ்டவசமாக நாம் நீதீ கேட்பது இலங்கை அரசாங்கத்திடம் தான்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்ச்சியாக சர்வதேச விசரணை வேண்டும் எனவும், சர்வதேச மேற்பார்வை வேண்டும் எனவும், சர்வதேச அழுத்தம் இருக்க வேண்டும் எனவும், சர்வதேசம் தலையிட வேண்டும் என எத்தனை முறை நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை அரசு ரோம் சட்டத்தில் கைச்சாத்திடவில்லை என்பதை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்பதை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வருகின்றார்கள்.
தமிழரசுக் கட்சியானது தொடர்ந்தும் சர்வதேச விசாரணையினை கோரினாலும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.
முன்னர் இருந்த அரசாங்கங்கள் இந்த படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின்னிக்கின்றது.
ஏனென்றால் அவர்களும் அயிவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் என்பதாலே இவற்றிக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் அவர்கள் ஈடுபாடில்லாமல் ஆட்சியை புரிந்தனர். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தும் மாறி மாறி அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி கட்சி 2024ம் ஆண்டு வரை எந்தக்காலப்பகுதியிலும் ஆட்சி செய்யாமையின் காரணமாக நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை பல தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான முதலாவது சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள்.
அண்மையில் நாட்டிற்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் தமிழரசுக் கட்சி சர்வதேச விசாரணை தேவை என்று கூறிய போது, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையினூடாக மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் கையாளப்போகின்றோம் என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவினால் சொல்லப்பட்ட TRC இனை தான் பயன்படுத்த போவதாக விஜித ஹேரத் சொல்லியுள்ளார். என்.பி.பி அரசாங்கத்தினூடாகவும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.
நீதியை வழங்குவதன் ஊடாக எந்தவொரு தேசிய மக்கள் சக்தி கட்சியினர் பாதிக்கப்படப்போவதில்லை. அப்படியிருந்தும் அதனை மறுக்கின்றார்காள் என்றால் இவர்களும் பெரும்பாண்மை இனத்தை பாதுகாப்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.
தமிழரசுக் கட்சியை உடைக்க வேண்டூம் என்றும், பலவீனமாக்க வேண்டும் எனவும் சில தமிழ் கட்சிகள் உழைக்கின்றனர்.
யாழ்குடா நாட்டிற்க்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள் வடக்கு கிழக்கு மக்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாக எப்படி பேச முடியும். தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே இவர்களின் கொள்கையாக கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கெதிராக நடைபெற்ற அநீதிகளுக்கெதிராக மக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றார்கள். இதனை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கின்றார்கள். தமிழ் மக்கள் கட்சியுடன் உள்ளார்கள் என்ற செய்தியை சொல்லவும் வருடந்தோறூம் நினைவேந்தல்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்கள் இந்நாட்டிற்குள்ளே அகதிகளாக வாழக்கூடாது என்றால் நிரந்தரமான மீளப்பெறமுடியாத அரசியற் தீர்வொன்று வேண்டும். அரசியற் தீர்வு விடயத்திலும் இந்த அரசாங்கம் பின்வாங்குகின்றது என்பதைத்தான் சொல்ல வேண்டும்.
அதிகாரப்பகிர்வூடன் கூடிய மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு கூட அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது. நிரந்தரமான அரசியற் தீர்வை ஒரு புதிய அரசியலமைப்பினூடாக கொண்டுவருவதற்கு காலதாமதமானாலும் கூட உடனடியாக செய்யக்கூடியாக மாகாண சபைத்தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்கின்றது.
அரசாங்கம் செய்யத்தவறியதனால் நான் பாராளுமன்றத்திற்கு சட்டமூலம் கொண்டு வந்தபோது அது சாணக்கியனுடைய சட்டமூலம் என்று நீங்கள் நினைத்தால் அந்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் சட்டமூலமாக மாற்றி நடைமுறைப்படுத்துமாறும் கூறியுள்ளேன்.
மாகாண சபையினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து செயற்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.