உள்நாடுபிராந்தியம்

மூதூர் மீனவர்களின் கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் (குளோபல் சீ புட்) நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, இன்று (24) திங்கட்கிழமை அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் செய்து முதலில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சமர்ப்பித்தனர் பின்னர் மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது மீனவர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தயாரித்து, அதை மூதூர் பிரதேச உதவி செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர். கூடுதலாக, பல சமூக நல அமைப்புகளும் இந்நிகழ்விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமும் அநியாயமும் ஆகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகலாம்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் இந்தியா

ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று