பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை மூதூரில் ஒரு பாரிய கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
இப்பேரணி மூதூர் அக்கரைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்து, நடைப்பவனாக மூதூர் பிரதேச செயலாளர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் நேரடியாக பிரதேச செயலாளரை சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட மனிதாபிமான சிக்கல்கள் குறித்து தங்களது கவலைக்குரிய கோரிக்கைகளை மகஜராக கையளித்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், பலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உறுதியான கோஷங்களை எழுப்பினர்.
இப்பேரணியில் பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது இஸ்ரவேல் இராணுவத்திற்கு எதிர்ப்பு காண்பித்தனர்.
இந்நிகழ்வானது மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அமைதியாக நடைபெற்றது.
-முஹம்மது ஜிப்ரான்