அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடையை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் சிவில் அமைப்பினர் இன்று (23) வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் அவரது அமைச்சில் கலந்துரையாடினர்
அத்துடன், கொவிட்-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டல்களின் காரணமாக முஸ்லிம் ஜனாசாக்களை பெற ஏற்பட்ட தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில், முஸ்லிம் தாதியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டத்திற்குள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடை அணிவதில் எந்தவித சட்டத் தடை இல்லையெனவும், மரணங்களுடன் தொடர்பாக கொவிட் காலத்திற்கு முன்பிருந்த விதிமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவிதார்.
இன்றைய இந்தக் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர்களான முனீர் முளப்பர் மற்றும் அர்கம் இல்லியாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மீன் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பை உள்ளிட்ட 15 அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.