அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள நாவலடி வட்டையில் முஸ்லிம் விவசாயிகள் 100 ஏக்கர் காணியில் 40 வருட காலமாக விவசாயம் செய்து வந்தனர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் காணியில் 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு மட்டும் இரண்டு ஏக்கர் விகிதம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
மிகுதி விவசாயிகள் தங்களின் காணிக்கான உத்தரவுப்பத்திரங்களை வழங்குமாறு விண்ணப்பம் செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் 40 வருட காலமாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகளை விவசாயம் செய்ய வேண்டாம் என தடை விதித்துவிட்டு 21 முஸ்லிம்களின் காணிகளுக்குள் வெளிநபர்களை கொண்டு வந்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் அநீதியாகும் இந்த விடயத்திற்கு மாவட்ட மட்டத்தில் தீர்வு காண்பதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் எதுவித பலனும் இல்லாத நிலை தொடர்கிறது.
எனவே நாவலடிவட்டை முஸ்லிம்களுக்கான காணிக்குள் வெளிநபர் விவசாயம் செய்வதனை இடைநிறுத்தி முஸ்லிம்கள் 21 பேரின் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட உத்திரபத்திரங்களுக்கான கானிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை…
ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு இறக்காம பிரதேச செயலகப் பிரிவில் நாவலடி வட்டையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட 21 முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை வழங்குமாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.
நாவலடி வட்டை முஸ்லிம்களின் காணிகளுக்குள் 40 வருடகாலமாக விவசாயம் செய்து வந்தனர். அவர்களின் விவசாய காணிக்குள் விவசாயக் கிணறுகள் அமைந்துள்ளன.
முஸ்லிம்களின் காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்களை எடுத்து வந்து அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் சென்ற போது அவர்களையும், விவசாயிகளையும் வெளிநபர்கள் வந்து முஸ்லிம்களின் காணிக்குள் செல்வதற்கு தடை விதிக்கின்றனர்.
இந்த விடயமாக நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரேரணை கொண்டு வந்த போது 21 முஸ்லிம்களுக்குரிய விவசாயக் காணிகளை நில அளவையாளர்கள் அளந்து வழங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த நிலையில் 21 முஸ்லிம்களுக்குரிய காணிக்குள் தற்போது வெளிநபர்கள் வந்து விவசாய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செயற்பாடு அநீதியாகும். 21 முஸ்லிம் விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்தகால அரசாங்க காலத்தில் நடந்த செயற்பாடுகள் இந்த அரசாங்கத்திலும் நடைபெறாமல் தடை செய்ய வேண்டும்.
இல்லையெனில் நான் பாராளுமன்றத்தில் இந்த அநீதி தொடர்பாக கேள்வியினை முன்வைக்க உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் தமன பிரதேச செயலாளரிடம் விளக்கமளிக்குமாறு கேட்டார். நாவலடி வட்டையில் 21 முஸ்லிம்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் 2 ஏக்கர் வீதம் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீண்டகாலமாக விவசாயம் செய்யப்படாத நிலையில் இக்காணிகளுக்குள் வெளி விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ முஸ்லிம் விவசாயிகள் 21 பேருக்கு காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஏன் வெளிநபர்கள் வந்து விவசாயம் செய்ய வேண்டும்? என பிரதேச செயலாளரிடம் பிரதி அமைச்சர் கேட்டார்.
முஸ்லிம்களுக்குரிய காணிகளுக்குள் தான் வெளிநபர்கள் விவசாயம் செய்ய விரும்புவதாகவும் தமன பிரதேச செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட 21 முஸ்லிம் விவசாயிகளுக்கான காணிக்குள் வெளிநபர்கள விவசாயம் செய்ய வேண்டும், 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு வேறு காணி வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
ஆனால் முஸ்லிம் விவசாயிகள் 21 பேரும் தங்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
எனவே, முஸ்லிம்களுக்குரிய உத்தரவுப்பத்திரங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நாவலடி வட்டை காணிப் பிரச்சினை தொடர்பாக இருபகுதியினரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை நடாத்தி தீர்வு காண்பதாக தீர்மானிக்கப்பட்டது.
-கே எ ஹமீட்