இன்று தேசிய ரீதியாக எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் முற்போக்கு தேசியவாதமே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக அமைந்து காணப்படுகின்றன. சகல மதங்கள் மற்றும் இனங்கள் ஒன்றாய் இணைந்து செயற்படுவதன் மூலம் உயரிய சட்டம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டை எட்டிக்கொள்ள முடியும்.
இது குறித்து நாம் பேசும்போது, கருமம் ஆற்ற முடியாதோர், வாய்ச்சொல் வீரர்கள், நாட்டிற்கு மதிப்பு சேர்க்க முடியாதவர்கள், இனவாதிகள் தீயை மூட்ட முயற்சித்து வருகின்றனர்.
இது அவர்களின் அரசியலாக அமைந்து காணப்பட்டாலும் இது தவறான செயலாகும்.
ரணசிங்க பிரேமதாச அவர்கள் புத்தசாசன அமைச்சையும், புத்தசாசன நிதியத்தையும் ஸ்தாபித்து, பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கியதோடு, சக மதங்களுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்களை உருவாக்கினார். ஆனால் இன்று இந்த அமைச்சுக்கள் இல்லை.
அன்றிருந்த முறைகள் இன்று மாற்றப்பட்டுள்ளன. நாம் மீண்டும் ஏலவே இருந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலி உடலமத்த ஸ்ரீ போதிராஜாராமய விகாரை மற்றும் ஸ்ரீ விவேகராமய உபய விகாரையின் விகாராதிபதி, பனங்கல கங்காராமய மகா பிரிவேனா, இலங்கை ராமாஞ்ய நிகாயவின் காலி சங்க சபையின் அபிவிருத்தி விவகார செயலாளர் கலாநிதி, மகா பண்டித திரிபிடகாச்சார்யா சங்கைக்குரிய நாகோடா தீரானந்த தேரர், விகாரையில் சமயப் பணிகளை முன்னெடுத்து 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாம் ஒரு நாடாக ஒன்றுபட்டால், தேசிய பாதுகாப்பு உறுதிப்படும். பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், இரவில் விகாரைகளுக்குச் சென்று, புத்தர் சிலைகளை அகற்றி, மின்னர் மீண்டும் அதனை வைக்கும் சம்பங்களும் நடந்துள்ளன.
ஒரு கருமத்தை சரியாகச் செய்வதற்கான திறமையோ அனுபவமோ இல்லாமையால், இறுதியில் மோதல் நிலை எழுந்தது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் நடந்த சம்பவத்திற்கு மக்கள் பிரதிநிதியாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒரு விடயத்தை சரியான வழியில் கையாள அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லாவிட்டாலும், நாம் எதிர்க்கட்சியாக மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஒரு உண்மையான பௌத்தராக, சங்கைக்குரிய தேரர்களை தேர்தல் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்திக்கொள்ளாதவன் என்ற வகையில், நடைமுறை பௌத்தராக, அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விகாரைகள் மூலம் சமயக் கல்வியை பெற்றுக் கொடுத்து, நாகரிகமான தலைமுறையை கட்டியெழுப்ப முடியும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை விகாரைகள், மதஸ்தலங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க முடியும்.
தற்போது அறநெறி பாடசாலைகளில் இளைஞர் யுவதிகள் ஈடுபாடு குறைவாக காணப்படுவதனால், அவர்களை ஈர்க்கும் வகையில், மத வழிபாட்டுத் தலங்களை புதிய தொழில்நுட்பங்களைக் கற்பிக்கும் மையங்களாக மாற்ற வேண்டும்.
சீனம், இந்தி, ஜப்பான் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்கும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாம் தொழில்நுட்பத்தை நெருக்கமாக்கிக் கொள்ளாது விட்டால், உலகின் பிற நாடுகள் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்மை விஞ்சி விரைவான அபிவிருத்திகளை அடைந்து கொள்ளும்.
நாம் கிணற்றுத் தவளைகளைப் போலவே இருக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
