சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப் பருவம் மற்றும் பராமரிப்பு குறித்து வினைத்திறனான சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது!
தரமான சேவை மற்றும் பாலர் பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துதல் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை தரப்படுத்துவதன் ஊடாக மிகவும் வினைத்திறனான சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப பிள்ளைப் பருவம் மற்றும் பராமரிப்பு உட்பட பிள்ளைகளின் அபிவிருத்தி குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று (29) மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சரினால் பின்வரும் முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
தேசியக் கொள்கை 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாலர் பாடசாலை கல்வி தொடர்பான தேசியக் கொள்கை குறித்து மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின் விசேட அம்சமாக, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப பிள்ளைப் பருவ அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பகிரங்கமாக முன்வைக்க அமைச்சரினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன் போது முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் முன்பள்ளி துறையை மேம்படுத்துவதற்கான புதிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலுஷா கமகே, குருவிட்ட பிரதேச சபையின் தலைவர் விகசித புஸ்பசூரிய, சப்ரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் உஸ்னா சஹாஜான், சப்ரகமுவ மாகாண பிரதி கல்விப் பணிப்பாளரும் சப்ரகமுவ மாகாண முன்பள்ளி அபிவிருத்தி அதிகார சபையின் உறுப்பினருமான டி.என். உதயகாந்தி உள்ளிட்ட ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
