அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழு (CoPA) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (05) கூடி, சப்ரகமுவ மாகாணசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும்போதே இந்தத் தகவல்கள் தெரியவந்தன.

2010ஆம் ஆண்டின் அரசாங்க செலவு முகாமைத்துவ சுற்றுநிருபத்தின் படி சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரின் 3 வாகனங்களுக்கான 1,700 லீற்றர் எரிபொருள்களுக்காக 2014ஆம் ஆண்டு முதல் ரூ. 9,850,170 வழங்கப்பட்டிருந்த நிலையில், சப்ரகமுவ மாகாண சபையின் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திரவியல் அதிகாரசபை மற்றும் சப்ரகமுவ வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து மாதாந்தம் 1500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதியைப் பெற்று 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு இயந்திரவியல் அதிகாரசபையில் 2,695,000 ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2014 முதல் 2017 வரை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து ரூ.5,035,262 செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் எல்லையை விட ரூ. 7,730,262 அதிகமாக செலுத்தப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்தது.

இந்த நிலையில் ஒரு மாதகாலத்திற்குள் இது குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், வரையறையை மீறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், மாகாண ஆளுநர் வெளிநாட்டில் இருக்கும்போது அவருக்குரிய எரிபொருள் கொடுப்பனவை அவரது பிரத்தியேக செயலாளர் பெற்றுக் கொண்டமையும் இங்கு புலப்பட்டது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில், இவ்வாறு ரூ. 725,000 தொகை செலுத்தப்பட்டதாகத் தெரியவந்ததுடன், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின்படி ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் கொடுப்பனவை மற்றொருவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, குறித்த தொகையை முன்னாள் ஆளுநரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.

முன்னாள் ஆளுநர் எதிர்காலத்தில் கோபா குழுவிற்கு அழைக்கப்படுவார் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைக்குச் சொந்தமான காணிகளுக்கான வரிகளை வசூலிப்பதில் சிக்கல் நிறைந்த சூழ்நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய குழு, இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை இரண்டு மாத காலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியது.

மேலும், விநியோகஸ்தர்களினால் 2024ஆம் ஆண்டு விநியோகிக்கப்படவிருந்த சூரிய சக்தியில் இயங்கும் 90W வலுவைக் கொண்ட 1,500 வீதி விளக்குகளுக்காகப் பணம் செலுத்தப்படாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது.

குறித்த விநியோக நிறுவனம் 90W வீதி விளக்குகள் எனக் கூறி 30W வலுவைக் கொண்ட வீதி விளக்குகளையே விநியோகித்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாக உரிய வீதி விளக்குகளை வழங்குமாறு கோரியபோதும் அதனை வழங்காது கண்டியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதில் மோசடி இடம்பெற்றிருப்பது தெளிவாகத் தெரிவதால், கொள்முதல் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோபா குழு அறிவுறுத்தியது.

இக்கூட்டத்தில், கோபா குழுவின் உறுப்பினர்களான பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, ஒஷானி உமங்க, டி.கே. ஜயசுந்தர, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, சானக மதுகொட, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, கே.இளங்குமரன், சுனில் ரத்னசிறி மற்றும் லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது – ஆறு மாத காலத்துக்குள் குறை கூற முடியாது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor

பட்டலந்த விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor