முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், லண்டன் தூதரகத்தில் பணியாற்றும் நான்கு பேரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசாங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தி, பிரித்தானியா சென்றதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் நம்பகத் தன்மையை அறியும் பொருட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் சென்றிருந்த குற்றப் புலனாய்வுக் குழு, அங்குள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இன்று (24) நாடு திரும்பவுள்ள இவர்கள் விசாரணை குறித்த முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜாராகும் சட்டத்தரணிகள் குழு, கடந்த வாரம் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவைச் சந்தித்துள்ளது, தமது கட்சிக்காரர் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்த விடயங்களையும் இவர்கள் கேட்டறிந்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா, அனுஜா பிரேமரத்ன மற்றும் எராஜ் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு, சட்டமா அதிபரை சந்தித்து இது குறித்த கலந்துரையாடல்களை நடத்தியது.
அதே நேரம் , சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆகியோரும் சட்டமா அதிபருடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு இன்று (24) நாடு திரும்பியதும் ,விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
