முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள், முன்னாள் ஜனாதிபதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அவர் தற்போது திருப்திகரமான நிலையில் இருந்தாலும், அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் கூறினார்.
இருப்பினும், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் வைத்தியர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று வைத்தியர் பிரதீப் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
“அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு தற்போது அங்குள்ள கேட்போர் கூடத்தில் கலந்துரையாடி வருகிறது.
அந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, மருத்துவக் காரணம் என்ன, நிலை என்ன என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.
அதன் பிறகுதான் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
எங்கள் நிபுணர்கள் குழு அவரை நெருக்கமான மேற்பார்வையின் கீழ் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்க பரிந்துரைத்துள்ளது. அவர் சில நிலைத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறார்.
காலையிலும் பிற்பகலிலும் ஐசியூ நிபுணர்களால் கண்காணிக்கப்படுவதால், நிலைமை மிக விரைவாக மாறக்கூடும். அவர் பொருத்தமான நிலையில் இருக்கிறாரா என்பதை இன்று மாலைதான் கூற முடியும்.”
உத்தியோகபூர்வ விஜயம் என கூறி தனிப்பட்ட விஜயத்திற்காக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிஐடியால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு நாளை (26) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.