முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான கோவைகளைத் தயாரித்து கோரிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜித சேனாரத்ன இருந்த பல இடங்களுக்கும் கடந்த சில நாட்களாக அவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்றிருந்த போதும் அவர் அங்கு இல்லாமையால் அவரைக் கைது செய்ய முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.