இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (15) முற்பகல் அவர் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்து உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் தடை விதித்தார்.
அத்துடன், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் மேலதிக பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.
பிணை உத்தரவை அறிவிக்கும் போது நீதவான் குறிப்பிடுகையில், இந்த சந்தேகநபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முற்பிணை மனு இதே நீதிமன்றத்தால் நேற்று (14) நிராகரிக்கப்பட்டிருந்தது எனக் கூறினார்.
அதன் பின்னர், அவர் தாமாக முன்வந்து இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு சூழலில், இந்த சந்தேகநபர் நீதிமன்றத்தை தவிர்த்துச் செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலனை செய்தே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த முறைப்பாட்டை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிக்கப்பட்டது.