அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த ரிட் மனுவை அழைக்க திகதி நிர்ணயம்

கவனயீனமாக வாகனம் செலுத்தல், விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் பாரதூரமான விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ Petition) ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது இந்த மனுவை பரிசீலிப்பதற்காக சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டது.

குறித்த நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உரிய மனு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் தனது சாரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்திருந்ததாக மனுதாரரான முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார்.

அவ்வாறிருக்கையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அதற்கமைய தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரரான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளார்.

Related posts

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை

editor

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!