முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார இன்று வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.
சந்திராணி பண்டார, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக கடமையாற்றிய போது தனது அன்புக்குரியவர்களுக்கு சட்டவிரோதமாக அரச பதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, சந்திராணி பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருப்பதாகவும், அதற்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.