போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
முந்தைய நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது, அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.