அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.

பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் பி.எம்.டி. பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது

தீர்ப்பைப் பிரகடனம் செய்த நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டதாவது:

நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது.

ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும், 11,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு ரூபாய் 53 மில்லியன் வரையான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நீண்ட விசாரணையின் பின்னர், அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் குறித்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராகப் பிரதிவாதிகள் தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த மேன்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தம்மைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய இரு பிரதிவாதிகளும் தமது சட்டத்தரணிகள் ஊடாகவே இந்தக் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

நாளை சுகயீன விடுமுறை போராட்டம்.

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா