மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது, தமது விருப்பமே தவிர முடிவில்லை எனத் தெரிவித்த அவர், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக,ஏழு பேர் கொண்ட குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டது.
இக்கூட்டத்தி ல் வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டதாவது:
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் விருப்பம் உள்ளது.
இது குறித்து கட்சிக்கு முறையாக அறிவிக்கவுள்ளேன்.எனினும், தமது வேட்புமனுவை அங்கீகரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
தம்மை விடவும் பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் காணுமானால், கட்சியின் முடிவுக்கு முழுமையாக கட்டுப்படவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.