பலவீனமான, வினைத்திறனற்ற அரசாங்கமே இன்று நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.
நாட்டில் தினமும் மனிதக் கொலைகள் நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நாட்டில் உறுதி செய்யப்படாத நிலையே இன்று காணப்படுகின்றன.
குலைகார கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் சமூகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
இவற்றைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கத்திடம் முறையான திட்டமோ அல்லது செயல் ஒழுங்கோ இருப்பதாக தென்படவில்லை.
சமூகத்தை ஒரு பக்கம் கொலைகாரர்கள் தமது கைகளில் எடுத்து வரும் தருணத்தில், மறுபக்கத்தில் அரசியல் ரீதியாக முழு சமூகத்தையும் தமது கைகளில் எடுப்பதற்கு ஆளும் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாம் செல்லும் இடங்கள் எல்லாம், சிவில் பாதுகாப்புக் குழுக்களும், ஊர்காவல் குழுக்களும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலை இதற்கு முன்பு நடந்ததில்லை. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் பிரதேச சபைகளின் ஊடாக இளைஞர் கழகங்களை தாபிக்கும் நடவடிக்கைகளிலும் இதுதான் நடந்துள்ளது.
அரசாங்கத்தின் அடுத்த முயற்சியாக விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் மகளிர் சங்கங்களின் அதிகாரங்களை பெறுவதாக காணப்படுகின்றன. இறுதியில், இந்த ஆளும் தரப்பினர் மரண உதவி சங்கங்கள், பரிபாலன சபைகளினது அதிகாரங்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி, விகாரைகளில் எந்த பிக்கு விகாராதிபதியாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது. இந்த ஜனநாயக சமூகத்தில் எதோச்சதிகாரம் மேலோங்க நாம் இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவான உறுப்பினர்களுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்காகப் பேச நாம் மட்டுமே எஞ்சியுள்ளோம்.
இந்நாட்டில் காணப்பட்டு வரும் சகல மக்கள் பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியே மிக உரத்த குரலை எழுப்பி வருகிறது. ஓய்வூதியம் பெறுவோர், பட்டதாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் சகல பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் முன்னின்று செயல்படுவது ஐக்கிய மக்கள் சக்தியே என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் எதிர்காலமும் இருள்மயம்.
சுற்றுலாத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் கண்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நாட்டு மக்களின் வாழ்க்கை மட்டத்தை குறைத்து அதிகாரத்தைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை. சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன், அதன் நன்மைகளை இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பங்குதாரர்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலிருந்தே சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கான கரும பீட வாய்புகளைத் பெற்றுக் கொடுக்கிறது.
இது நமது நாட்டில் சுற்றுலாத்துறையை நம்பி, வாகான சேவைகளை முன்னெடுத்து வரும் சாரதிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து சுற்றுலா பயண நிறுவனங்களை (Travel Agencies) ஆரம்பிக்க வாய்ப்பு காணப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முட்டாள்தனமான முடிவுகளையே இந்த அரசாங்கம் தொடர்ந்தும் எடுத்து வருகிறது.
அரசாங்கம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளையே எடுத்துள்ளது. கோவிட் காலத்தில் கல்வித் துறையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. அச்சயமயம் 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரிகளாக பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று இந்த அரசாங்கம் இவர்களை மறந்து விட்டு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் காலங்களின் போது தமது கடமைகளை நிறைவேற்றுவோம் என இந்த அரசாங்கம் உறுதியளித்த போதிலும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உறுதுணையாக இருந்து வந்த இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
வீடியோ