2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான்.
அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல், நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகியவற்றையாகும்.
அந்த விசுவாசத்துடன், இலங்கையினால் மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலி மிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2025 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம்.
அந்தப் புயலின் காரணமாக நமது சொந்த நாட்டில் நமது சொந்த மக்களின் உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பலவற்றை இழந்தோம்.
அவை எல்லாவற்றையும் விட, தங்களது அனைத்தையும் இழந்த மக்களின் கண்ணீரும் வேதனையும் நமது இதயங்களில் பதிந்துள்ளன.
கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நத்தார் பண்டிகை என்பது அழிவுகளுக்கிடையே நம்பிக்கை பிறக்கும் காலமாக குறிப்பிடப்படலாம்.
தீமையை விலக்கி நன்மை ஆட்சி செய்யும் யுகத்தின் விடியலாகும். இருளான இரவுகளில் கூட ஓர் ஒளி பிறக்கிறது. அது நம்பிக்கையின் ஒளி.
டித்வா புயலுக்குப் பின் நாம் அனுபவித்த, நாம் கண்ட இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி உயர்ந்து கைகோர்த்த இலங்கையர்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான இதயத்தின் வழியாக நாம் ஒரு நாடாக மீண்டும் ஒரு முறை எழுந்து நிற்கவேண்டும். அந்த ஒற்றுமையை நமது வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையானது பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல, மக்களின் வேதனைக்கு பதிலளிக்கும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும், நீதியான மற்றும் கருணை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகும்.
எதிர்காலத்தில் நாம் ஒரு நாடாக பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே இந்த அழிவிலிருந்து பாடங்களை கற்று, உதவியற்றவர்களை பாதுகாக்கும், பேரழிவுகளின் முன்னால் மக்களை தனிமைப்படுத்தாத அரசை உருவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான்.
அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல் மற்றும் நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகும்.
அந்த விசுவாசத்துடன், இலங்கை மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவே, இந்த நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இலங்கை கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
