உள்நாடுபிராந்தியம்

மீட்கப்படும் எழும்புக்கூடுகள் மீதான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள் – தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையும் இலங்கையில் அரச கொள்கையாகவே முன்னெடுக்கப்பட்டன.

இந்த விடயத்தில் உள்நாட்டு விசாரணைகளோ அல்லது பொறிமுறைகளோ தீர்வைத்தராது. எமக்கு சர்வதேசத்தின் நீதியே தேவை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்தார்.

செம்மணியில் கிரிசாந்தி குமாரசுவாமி படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், எமது மண்ணில் சிறுவர்கள் பெண்கள் பெரியவர்கள் என வகை தொகையின்றி அரச படைகளால் கொன்றழிக்கப்பட்டுள்ளனர்.

இது சிவிலியன்கள் மீது போரினவாத அரச கொள்கைகளின் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையுமாகும்.

அவ்வகையில் கிரிசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட நுற்றுக் கணக்கானவர்கள் முழுமையான அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தினம் தினமாக கொன்றழிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறாக புதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள் நீதிகோரி மீண்டெழுந்து நிற்கின்றன.
 
இப்போது கூட நூற்றுக்கணக்கான எழும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. இலங்கை அரசோ அல்லது அரசாங்கமோ மேற்கொள்ளும் எந்த விசாரணையும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதையும் நீதி விசாரணைகளை காலதாமதத்திற்கு உட்படுத்தி சாட்சியங்களை வலுவற்றதாக்கும் உத்திகளுமாகும். தற்போதும் ஜெனிவாவில் அதற்கான நகர்வு ஒன்றையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.

நாங்கள் எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாகச் செயற்பட வேண்டிய பொறுப்புடையவர்கள்.

எமது தேசத்தில் எங்களது பெண் பிள்ளை ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றாள்.

இது போன்று இராணுவ வளங்கள் உள்ளிட்ட அரச வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் கொன்றழிக்கப்பட்ட மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களுக்கு இன்றும் தீர்வுகள் வழங்கப்படவில்லை. 

மாறாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் சிற்சில ஜனநாயக இடைவெளிகளை ஏற்படுத்திவிட்டு அவற்றினை தமிழ் மக்களுக்கான அசியல் தீர்வுகள் போல காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றது.

இந்த இடத்தில் நாம் இனமாகத் திரட்சி பெற வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

Related posts

ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

editor

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு