அரசியல்உள்நாடு

மின்சார சபை ஊழியர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியை மீண்டும் வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி அநுரகுமார உட்பட அரசாங்கம் மின்சார சபையின் சேவையாளர்களை அச்சுறுத்துவதற்கு முன்னர் மக்களிடம் மன்னிப்பு கோரி சுமார் 25 ஆண்டுகாலமாக தமது மின்சார தொழிற்சங்கத்தினரிடம் சேகரித்த நிதியை அவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.

மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனையை 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்தார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணி தான் ஆரம்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

மின்சார சபையை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மின்சார சபை தொழிற்சங்க உறுப்பினர்களிடமிருந்து ஒவ்வொரு மாதம் தலா 200 ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை தமது கட்சியின் வங்கி கணக்கில் வைப்பிட்டது.

2015 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்து மக்கள் விடுதலை முன்னணி தமது 6000 ஆதரவாளர்களை இலங்கை மின்சார சபையில் இணைத்துக் கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணி ஒவ்வொரு மாதமும் தம்மிடமிருந்து 5000 ரூபாய் அறவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார உட்பட அரசாங்கம் மின்சார சபையின் சேவையாளர்களை அச்சுறுத்துவதற்கு முன்னர் மக்களிடம் மன்னிப்பு கோரி சுமார் 25 ஆண்டுகாலமாக தமது மின்சார தொழிற்சங்கத்தினரிடம் சேகரித்த நிதியை அவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.

இலங்கை மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.75 இலட்ச மின்பாவனையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

விலைமனுகோரலின் போது முறையற்ற வகையில் செயற்பட்டு அரசுக்கு சுமார் 85 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஏற்படுத்திய நபரையே வலுசக்தி அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் எவ்வாறு ஊழலற்ற நாட்டை உருவாக்க முடியும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 323 பேர் கைது