மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தைக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் இன்று (26) காலை வரை வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கமும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் உரிய மின்சார நிலுவை கொடுப்பனவு தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் மின்சார சபையினர் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சீரமைத்து மீள வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள குறித்த பொதுச் சந்தைக்கான மின்சார கட்டணத்த செலுத்தும் உத்தியோகத்தர் உரிய காலத்தில் நிதியை செலுத்த தவறிய காரணத்தால் இவ்வாறு மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தனக்கு தொலைபேசி ஊடாக நிலைமையை அறிய தந்ததாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.
எனினும் இலங்கையின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கல்முனை மாநகர பொதுச் சந்தை வியாழக்கிழமை(25) இரவு இருளில் மூழ்கியுள்ளதை காண முடிந்தது.
வருடாந்தம் பல கோடி ரூபா வருமானத்தை பெறுகின்ற இவ்வாறான சந்தை தொகுதியின் மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை குறித்து பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
-பாறுக் ஷிஹான்