அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ள நீரில் மதரஸா மாணவர்களை ஏற்றிவந்த உழவு இயந்திரம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகள் சம்மாந்துறை நீதிமன்றில் முன்னிலையாகி வகை சொல்ல வேண்டிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி இந்த வழக்கு நேற்று (31) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான் ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான சப்றாஸ் சரீப் மற்றும் எம்.வை. அன்வர் சியாத் ஆகியோர் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கில் பொலிஸ் மா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இவ்வழக்கில் அரசு அதிகாரிகள் எவ்வாறு அசமந்தமாக செற்பட்டிருந்தனர் என்பதையும் நீதிமன்றுக்கு விளக்கினர்.
குறித்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட மன்று இவ்வனர்த்த சம்பவத்தில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஆகக் குறைந்தபட்ச கவனத்தையாவது எடுத்திருக்க வேண்டும் என்று விளம்பிருந்ததோடு இச்சம்பவம் தொடர்பில் முழுமையான புலன் விசாரணை அறிக்கையினை ஆராய்ந்து தேவையான கட்டளை ஒன்றை அடுத்த தவணையில் (28.11.2025 ஆம் திகதியன்று) பிறப்பிப்பதாக உறுதியளித்திருந்தது.
மீளவும் வழக்கு 28.11.2025 ஆம் திகதியன்று அழைப்புக்காக தவணை வழங்கப்பட்டுள்ளது.
-நூருல் ஹுதா உமர்
