மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் தயார்.
முடிந்தளவு விரைவாக தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சிக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பழைய முறைமையிலேனும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை நாம் வரவேற்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
எமது அரசியலமைப்பிற்கமைய மாகாணசபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இதனை இடைநிறுத்தி வைத்திருக்கின்றனர்.
எனவே தற்போது அந்த அரசியலமைப்பு திருத்தத்தினை மீளப் பெற்றால் அரசாங்கம் கூறுவதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த முடியும்.
எனவே புதிதாக எதனையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. இந்த அரசாங்கத்தினால் குறித்த அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்படவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கத்தால் அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலும் எந்தத் தடையும் இல்லை.
மாகாணசபைகளை செயற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொது மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளாலேயே மாகாணசபைகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக ஆளுனர்கள் மாகாணசபைகளை ஆட்சி செய்கின்றனர். அது தவறாகும்.
அவசர நிலைமைகளின் போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போது இவ்வாறான நிர்வாகம் இடம்பெறலாம்.
ஆனால் அதற்காக பல ஆண்டுகளாக இவ்வாறு மாகாணசபைகளில் ஆளுனர் ஆட்சி இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.
எனவே முடிந்தளவு விரைவாக தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சிக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
-எம்.மனோசித்ரா