உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தனர். பின்னர் இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட தரப்பினர் குறித்த பிரச்சினை தொடர்பான விடயங்களை முன்வைத்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தகரவேட்டவொன், மத்தியவெளி, முத்து நகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் 350 குடும்பங்களைச் சேரந்த, 1000 பேருக்குமேற்பட்டோர், 1972 ஆம் ஆண்டு முதல் 53 வருடங்களாக, 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
2023 ஆண்டு முதல் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து 800 ஏக்கரில் 53 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது தடை செய்யப்பட்டதுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
1972 ஆம் ஆண்டு முதல், பல்வேறு சந்தர்ப்பங்களில், இந்தப் பகுதி மக்கள் பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களைச் சந்தித்து இந்தக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், அதனை வழங்காது நிராகரித்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வரும் இந்த பயிர் செய்கை நிலம், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி என உரிமை கோரி, 200 ஏக்கர் காணியை, சூரிய மின் சக்தி (புதுப்பிக்கத்தக்க மின் சக்தி) உற்பத்தி நிலையங்களை நிறுவ பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனால் 53 வருடங்களாக பயிர் செய்து வந்த விவசாயிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
சூரிய சக்தியை ஊக்குவிப்பதற்கு நான் எதிரானவன் அல்ல, ஆனால் 800 ஏக்கர் விவசாய காணியில் 200 ஏக்கர் காணியை அபகரித்து, சூரிய சக்தி திட்டங்களுக்கு வழங்க எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.
சூரிய மின்சக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்குப் போதுமான நிலப் பரப்பு இருக்கத்தக்க, இந்த 350 குடும்பங்களை இலக்கு வைத்து, அவர்களினது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த காணிகளை அழித்து, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்குவது கடுமையான அநீதியான செயலாகும்.
அவ்வாறே காணிக்கான உரிமை மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு காணப்படும் உரிமைகளை இது திருடும் செயலாகவும் அமைந்து காணப்படுகின்றது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் முத்து நகர் கிராம விவசாயிகளின் காணிப் பிரச்சினையை ஆராயும் நோக்கில் அப்பிரதேசத்திற்கு இன்று (16) மேற்கொண்ட விஜயத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த காணிக்கான உரிமை விவசாயிகளுக்கே காணப்படுகின்றது. இந்த சூரிய மின் சக்தி திட்டத்திற்கு இடத்தை ஒதுக்கி, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மோசமான விடயமாகும்.
இந்த விவசாயிகள் பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உர மானியங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றையும் பெற்றுள்ளனர்.
இந்த காணிகளை வழங்கிய முந்தைய அரசாங்க தரப்பினரோடு சேர்ந்து, தற்போதைய ஆளும் தரப்பைச் சேர்ந்தோரும் நிலத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவசாய காணிகளை பாதுகாத்து தருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் தற்போதைய ஆளும் தரப்பினர் பங்கேற்று, ஆராய்ந்து ஆசிர்வதித்துள்ளனர். இவ்வாறு விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களை, முந்தைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் காணி அபகரிப்புக்கு இடமளித்துள்ளன. பாடசாலை, கோயில், பள்ளிவாசல் போன்றவை கூட இங்கு அமைந்து காணப்படுகின்றன.
முத்து நகர் குளமும் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஏனைய குளங்களையும் கிட்டிய காலத்தில் தரைமட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
செல்வ வளத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலத்தைச் சூறையாடி வருகின்றனர்.
இவ்வாறு தமது செல்வத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி காணிகளை இவ்வாறு கொள்ளையடிக்க இடமளிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி எமது அரசாங்கத்தின் கீழ் இந்த காணிகளை மீட்டித்தருவோம்.
பயிரிடப்படாத தரிசு காணிகளில் சூரிய ஆற்றல் திட்டத்தை முன்னெடுக்க முடியும். பயிரிடப்பட்ட காணிகளை இத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. விவசாய காணிகளை அபகரித்து சூரிய ஆற்றல் சக்தி திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது.
குறைந்தபட்சம் நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய மாற்று காணிகளை இவர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும். அரசாங்கத்திடம் இதற்கான இயலுமை காணப்பட்டிருந்தபோதிலும், இதனை அரசாங்கம் செய்யவில்லை.
வழக்குகளைப் பதிவு செய்து, பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
350 குடும்பம் தானே. 1000 பேர் தானே, இது சிறிய தொகையினர் தானே என்று சிலர் கருதலாம். எமக்கு எத்தனை குடும்பம் என்ற அளவு முக்கியமில்லை.
இந்நாட்டில் எப்பகுதியிலேனும் எங்கேனும் வாழும் மக்களுக்கு ஏதேனும் அநீதி நடந்தால் முற்போக்கு எதிர்க்கட்சியாக நாம் அங்கு நிற்போம். நாம் உங்களோடு நிற்போம்.
எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் கீழே நான் இன்று இங்கு வந்துள்ளேன். 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தின் ஓர் கட்டமாகவே உங்கள் மத்தியில் வந்து, உங்களிடமிருந்தே தகவல்களைப் பெற்று குறித்த பிரச்சினைக்காக வேண்டி முன்நிற்கிறோம். நாம் இவ்வாறு மக்கள் மத்தியில் வந்து பிரச்சினைகளை கேட்டறிவதற்கு பலர் ஏழனம் செய்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்ட மக்கள் எமக்கு மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தனர்.
அதனை நாம் ஒருபோதும் மறந்துவிட மாட்டோம். நிச்சயமாக உங்களது காணிப் பிரச்சினைக்கு நாம் அன்றும் முன்நின்றோம். அன்றும் போராடினோம். இன்றும் போராடி வருகிறோம். நாளையும் போராடுவோம்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். இந்த காணி விடயம் தொடர்பில் சுதந்திரமான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு, இந்த உரிமையை நாம் நிச்சயமாகப் பெற்றுத் தருவோம்.
இப்பிரதேசத்தை சேர்ந்த ஆளும் தரப்பு எம்பிக்கள் உங்கள் மத்தியில் வந்து என்ன கூறினர். முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறினரல்லவா? ஆனால் பழைய பாதையிலயே பயணிக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு இந்த காணிகளை அபரிக்கும் கொள்கையிலயே இவர்களும் பயணிக்கின்றனர்.
இரட்டை நாக்குக் பேச்சுக்களைப் பேச வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறுகிறோம். இரட்டை நாக்கு செயல்பாட்டில் ஈடுபட வேண்டாம் என கூறுகிறோம். இப்பிரதேச மக்களினது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.
மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நாமும் கூறுகிறோம். மாகாண சபை தேர்தலை நடத்துங்கள், இப்பிரதேச மக்கள் மாத்திரமல்ல விசேடமாக முழு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவர்.
அரசாங்கத்திற்கு பதிலொன்றை வழங்க திருகோணமலை மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முழு நாட்டுமக்களுமே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே அவசரமாக மாகாண சபை தேர்தலொன்றை நடத்துங்கள். மாகாண சபை தேர்தலொன்று நடப்பதற்கு நாமும் விருப்பம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.