முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.
தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பல அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்றுதிரண்டு கார்ல்டன் இல்லத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவரை வாழ்த்தி தங்களது அன்பை வெளிப்பிடுத்தியிருந்தனர்.