கொழும்பில் உள்ள மத்திய பஸ் நிலையம், புனரமைப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (11) முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பஸ்தியன் மாவத்தை ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
விமானப்படையினரால் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒருங்கிணைந்த கால அட்டவணையின் கீழ் இயங்கும் நீண்ட தூரப் பேருந்துகள் பஸ்தியன் மாவத்தை பஸ் டிப்போவில் இருந்தும், ஏனைய குறுகிய தூரப் பேருந்துகள் போதிராஜ மாவத்தையில் இருந்தும் இயக்கப்படும் என சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு பஸ் தரிப்பிடம் மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புனரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் சுமார் 540 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
-எம்.மனோசித்ரா