மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய 4 பேரும் இன்று மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை , தாய், மகன் மற்றும் மகள் ஆகிய 4 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த தந்தை,தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
-எஸ்.ஆர்.லெம்பேட்