ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின்
நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
மன்னார் பிரதேசத்தில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின்சார நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நாட்டின் எரிசக்தித் தேவை மற்றும் பொருளாதாரத்திற்கு இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
காற்றாலை மின் நிலையம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
எரிசக்தியானது அப்பிரதேசத்தின் மட்டுமல்ல, நாட்டின் தேசிய வளம் என்றும், மின்சாரப் பிரச்சினை வீட்டு மின்கட்டணத்துடன் மட்டுமல்லாமல், நாட்டின் உற்பத்திச் செலவு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துடனும் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையைத் தொடர்வதில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அரசாங்கம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் வலியுறுத்தினார்.
நாட்டின் அனைத்து வளங்களும் இந்நாட்டு மக்களுக்கே சொந்தமானவை என்றும், எரிசக்தி என்பது ஒரு பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அது முழு நாட்டு மக்களின் உரிமை என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு நழுவிப் போகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் முதலீட்டாளர்களுக்கும், கைத்தொழிலதிபர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கத்திற்கு முடியாமல் போவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அனைத்துத் தரப்பினரும் உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் வலியுறுத்தினார்.
இதன்போது, மன்னார் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள், இல்மனைட் திட்டம் மற்றும் காற்றாலைத் திட்டம் ஆகியவற்றால் சூழல் பாதிப்புகளும் மக்கள் வாழ்வில் தாக்கங்களும் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
சுற்றாடல் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தெரயப்படுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மன்னார் பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இந்தத் திட்டம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.
அந்தக் காலப்பகுதிக்குள் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதற்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.
அந்த நிறுவனம் மூலம் ஒரு அலகு மின்சாரத்தை 8.26 அமெரிக்க டொலருக்கு வாங்கவிருந்தது, அதன் இலங்கை மதிப்பு 25 ரூபாயாகும். ஆனால், இந்த காற்றாலை மின் திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 4.65 அமெரிக்க டொலர் ஆகும், அதன் இலங்கை மதிப்பு 13 ரூபாயாகும். ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி விலையை 13 ரூபாய் என்ற நிலையான மட்டத்தில் பேண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வடக்கின் கொக்கிளாய் பாலத்தைப் புனரமைப்பதற்கும், மன்னார் புதிய நீர் வழங்கல் திட்டத்திற்கும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
காற்றாலை மின் நிலையம் காரணமாக மன்னார் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருக்குமானால், அது குறித்து அறிக்கை தயாரித்து வழங்குமாறு காணி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இங்கு குறிப்பிட்டார்.
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவை இணைந்து வடக்கின் காணிகள் குறித்த அறிக்கையைத் தயாரித்து, முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க உள்ளன.
வடக்கு மாகாண மதத் தலைவர்கள், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரும், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட அரச அதிகாரிகளும், மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.